கூடங்குளத்தில் மிதவை கப்பலை மீட்பதில் சிக்கல்; அதிகாரிகள் தீவிர ஆலோசனை

பாறை இடுக்கில் சிக்கி சேதம் அடைந்ததால் கூடங்குளத்தில் மிதவை கப்பலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளத்தில் மிதவை கப்பலை மீட்பதில் சிக்கல்; அதிகாரிகள் தீவிர ஆலோசனை
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள் அமைக்கும் பணிக்காக 2 நீராவி ஜெனரேட்டர்கள் கடந்த 8-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மிதவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுகம் அருகே வந்தபோது, மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டது. இதை மீட்பதற்காக இலங்கை கொழும்புவில் இருந்து அதிக திறன் கொண்ட அதிநவீன இழுவை கப்பல் கூடங்குளத்திற்கு வந்தது. ஆனால் மேலும் ஒரு இழுவை கப்பல் தேவைப்படுவதால் கொழும்புவில் இருந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பாறை இடுக்கில் சிக்கியுள்ள மிதவை கப்பல் அடிபாகத்தில் சேதம் அடைந்து தண்ணீர் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட இழுவை கப்பல் மூலம் மிதவை கப்பலை இழுக்கும்போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அணுமின் நிலைய அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் இலங்கையில் இருந்து வந்த இழுவை கப்பலின் மாலுமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின்படி இழுவை கப்பல் மூலம் பாறை இடுக்கில் சிக்கிய மிதவை கப்பலை மீட்பதற்கு பதிலாக கடற்கரையில் இருந்து சுமார் 300 அடி தொலைவில் தண்ணீருக்குள் பாறை இடுக்கில் சிக்கி உள்ள மிதவை கப்பல் வரை கல், மண் நிரப்பி ரோடு அமைத்து நீயராவி ஜெனரேட்டர்களை கிரேன் மூலம் மீட்கலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com