த.வெ.க. விருப்பமனு தேதியை விஜய் அறிவிப்பார்: செங்கோட்டையன் பேட்டி

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது என செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.
ஈரோடு,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள சூழலில், அரசியல் களம் பரபரப்படைந்து உள்ளது. இந்த தேர்தலில் புதிய கட்சியாக த.வெ.க. களமிறங்கவுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சியில் பங்கு என்று அறிவித்து இருக்கிறார். இதனால், ஆட்சியமைக்கும் பட்சத்தில், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
த.வெ.க.வில் கடந்த சில மாதங்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. இந்த சூழலில், சில தொகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. திருச்செங்கோட்டில் இன்று வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதன்படி, அருண்ராஜ் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், த.வெ.க.வில் இன்னும் பலர் இணைய உள்ளனர். மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆவார் என கூறினார்.
அவர் தொடர்ந்து, சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. த.வெ.க.வுக்கு மக்கள் சக்தி இருக்கிறது என்றார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியுடனான (என்.டி.ஏ.) கூட்டணி பேச்சுவார்த்தை உண்டா? என்பது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் கணிக்க முடியாது என கூறினார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, அதனை நீங்கள்தான் கூற வேண்டும் என கூறினார். த.வெ.க.வின் விருப்பமனு தேதியை விஜய் அறிவிப்பார் என்றும் செங்கோட்டையன் கூறினார். வேறு கட்சியில் இருந்து யாரேனும் வருவார்களா? என்ற கேள்விக்கு, தி.மு.க.வில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் வர இருக்கின்றனர் என கூறினார்.






