அரசு பேருந்து - வேன் மோதி இருவர் பலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து - வேன் மோதி இருவர் பலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை அரசு பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், குன்னத்தூர் கிராமத்தில் இன்று (01.12.2025) காலை சுமார் 6.00 மணியளவில் சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றும், கீழார்கொள்ளை கிராமத்திலிருந்து ஆலந்தூரிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த உமா (வயது 40) க/பெ.மூர்த்தி மற்றும் பானு (வயது 24) க/பெ.சரவணன் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை, பூஞ்சேரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com