விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்
விடுதியில் மாணவர்களுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டி இராஜேந்திரா நகரில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் அவர்களின் சொந்த ஊர், பெற்றோர் குறித்தும், அவர்கள் பயின்று வரும் வகுப்பு குறித்தும் கேட்டறிந்தார். படிப்போடு விளையாடுவதிலும் உள்ள ஆர்வம் குறித்தும், விளையாடுவதின் நன்மை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் விவரப் பதிவேட்டினை பார்வையிட்டு உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் மாணவர்கள் படிப்பதற்காக வாங்கப்படும் தினசரி நாளிதழ்களை பார்வையிட்டு, மாணவர்கள் நாளிதழ்களை வாசிப்பதை ஊக்கப்படுத்த விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தினார். மேலும் விடுதியில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவர் விடுதியில் சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க உள்ள வசதிகளை பார்வையிட்டு, மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியாளரிடம் மாணவர்களுக்கு விருப்பமான உணவு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்டுள்ள உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, உணவு வகைகளை ருசி பார்த்தார். விடுதியில் மாணவர்களுக்கான குளியல் அறை, கழிப்பறை ஆகியவை சுத்தமாக பராமரிக்கப்படுகின்றதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.