

திருச்சி,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலுள்ள 401 வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 651 தொகுப்புகளை தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் விளையாட்டு மைதானங்களை அமைத்து வருவதுடன், விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகின்றது.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து (12525) கிராம ஊராட்சிகளுக்கும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 85.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 16,798 விளையாட்டு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையின்போது “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் 19.11.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் உள்ள 12,831 நகர்ப்புற வார்டுகளுக்கு 30 விளையாட்டு பொருட்கள் அடங்கிய 19,767 விளையாட்டு உபகரணங்களின் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
இதுவரை டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள 11 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 248 பேரூராட்சிகளைச் சேர்ந்த 6,469 வார்டுகளுக்கு 9,868 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (6.2.2026) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்திலுள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலுள்ள 401 வார்டுகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 651 தொகுப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் கடலூர், கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 8 மாநகராட்சிகள், 40 நகராட்சிகள், 113 பேரூராட்சிகளைச் சேர்ந்த 3,213 வார்டுகளுக்கு 5,091 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்குவதை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்திலுள்ள நகர்ப்புற அலகுகளுக்கு (Urban Units) விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனங்களை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.