சென்னை- ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரெயில்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை

பிரதமரால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திறந்து வைக்கப்பட்ட புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டில் உள்ளதால், ராமேஸ்வரத்திற்கு ரெயில் இயக்குவதில் இருந்த முக்கியத் தடைகள் நீங்கிவிட்டன.
சென்னை- ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரெயில்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை
Published on

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் சிவகங்கை வழியாகப் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராமநாதபுரம்- ராமேஸ்வரம் இடையிலான மின்மயமாக்கல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே தெற்கு ரெயில்வே வந்தே பாரத் ரெயில் சேவைக்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

பிரதமரால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திறந்து வைக்கப்பட்ட புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டில் உள்ளதால், ராமேஸ்வரத்திற்கு ரெயில் இயக்குவதில் இருந்த முக்கியத் தடைகள் நீங்கிவிட்டன. தற்போது இந்த வழித்தடத்தில் இரவு நேர ரெயில்கள் மட்டுமே உள்ளன. பகல் நேரத்தில் (காலை முதல் மாலை வரை) பயணிப்பதற்கு இந்த வந்தே பாரத் ரெயில் சேவை மிகவும் அவசியம்.

சென்னைக்குச் சென்று வரும் ஐ.டி. ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவும். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சி.இ.சி.ஆர்.ஐ. போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும், தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த ரெயில் ஒரு உயிர்நாடியாக அமையும். எனவே, தென் தமிழக மக்களின் நலன் கருதி இந்தத் திட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com