அண்ணன் செங்கோட்டையனின் அனுபவம்....வீடியோ வெளியிட்ட விஜய்

செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கிடையே செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது தொடர்பான கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதேபோல் த.வெ.க. தரப்பில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்கப்பட்டபோதும் அவரும் பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இதனால் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது. அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட , 50 -க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முறைப்படி த.வெ.க.வில் இணைந்தார். நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிஇந்நிலையில் செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ,
இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றவர் அண்ணன் செங்கோட்டையன்.அதிமுகவில் இருபெரும் தலைவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையன்.50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். இணைந்து மக்கள் பணியாற்ற செங்கோட்டையனை வரவேற்கிறேன். செங்கோட்டையன் அனுபவம் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். என தெரிவித்துள்ளார் .






