விஜயகாந்த் பிறந்த நாளன்று மதுரையில் மாநாடு நடத்தும் விஜய்

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளன்று தவெக மாநாட்டை விஜய் நடத்துகிறார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. அதைபோல தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க கட்சியின் செயற்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் கடந்த 4-ம் தேதி நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். விஜய், சீமானின் அறிவிப்புகளால் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது.
முன்னதாக நடிகர் விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.
இந்தநிலையில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளான்று ஆகஸ்டு 25-ம் தேதி தவெக மாநாட்டை நடத்துகிறார் விஜய். விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியபோது முதல் மாநாட்டை மதுரையில் நடத்தி இருந்தார். இந்த மாநாட்டில் தே.மு.தி.க. என்ற தனது கட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்திருந்தார். 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனையாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில், மதுரை மாநாட்டு தேதியை த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என ஆதரவு தெரிவித்து அக்கட்சியினர் அப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் களத்தில் மதுரை மிக முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாதவை. எம்ஜிஆர் காலம் தொட்டு மதுரைக்கும் புதிதாக அரசியலில் தடம் பதிப்பவர்களுக்கு ஒரு 'ராசி' இருக்கிறது. அந்த 'ராசி' விஜய்க்கு எப்படிப் பொருந்துகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.






