தமிழ்நாட்டில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


தமிழ்நாட்டில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x

கோப்புப்படம் 

தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா என்று பொதுமக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டு வருகிறது. அண்மைக் காலமாக தமிழ்நாடு என்றாலே கொலை நாடு என்று சொல்லும் அளவுக்கும் பட்டப் பகலில் படுகொலைகள், போதைக் கலாச்சாரம், பாலியல் துன்புறுத்தல்கள் என சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முழுக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், வன்முறையாளர்கள்மீது மென்மையான போக்கினைக் கடைபிடிப்பதும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இது கடும் கண்டனத்திற்குரியது.

தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜே.சி.பி. ஓட்டுநர் அடித்துக் கொலை, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை, கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த இரு பெண்கள் மீது முகமூடி கொள்ளையர்கள் தாக்குதல், பல்லாவரம் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டினை பார்த்துக் கொண்டிருந்த காவலாளி கத்தியால் குத்திக் கொலை, விழுப்புரம் மாவட்டம் திடீர் நகரைச் சேர்ந்தவர் சரமாரியாக வெட்டிக் கொலை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் வெட்டிக் கொலை, ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண் அடித்துக் கொலை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தைச் சேர்ந்த தொழிலாளி குத்திக் கொலை என பல வன்முறைச் செயல்கள் கடந்த ஓரிரு நாட்களில் நடைபெற்றுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. பத்திரிகைகளில் வராத செய்திகள் ஏராளம். வளர்ச்சிக்குப் பதிலாக வன்முறை தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது.

வன்முறைச் செயல்கள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் ஆகிய சட்ட விரோதச் செயல்களின் பின்னணியில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதும், ஆளும் கட்சியினரின் அழுத்தம் காரணமாக காவல்துறையினர் அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பதும்தான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசிற்கு உண்டு.

முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி, காவல்துறை சுதந்திரமாக செயல்படவும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் வழங்கவும், இனி வருங்காலங்களில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story