முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
x
தினத்தந்தி 23 July 2025 11:27 AM IST (Updated: 23 July 2025 11:31 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவர் நேற்று முன்தினம் காலை 10.40 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும், அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரீம்ஸ் சாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சுமார் 2½ மணி நேரம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சகோதரர் மு.க.முத்து மறைவால் ஒருநாள் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிடாமல் இருந்துள்ளார். அதற்கு மறுநாள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டபோது முதல்-அமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை; அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அப்பலோ ஆஸ்பத்திரியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் எனும் தகவல் இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story