அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்


நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை டெல்லி சென்றார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காகவே அவரது வருகை என கூறப்பட்டது. அதன்படி நேற்று மதியம் சி.பி.ராதாகிருஷ்ணனை அவர் சந்தித்தார். இதனைத்தொடர்ந்து தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுத்தார்.இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. இரவு 8 மணிக்கு நேரம் வழங்கப்பட்டது. அதன்படி இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கிருஷ்ணமேனன் ரோட்டில் உள்ள அமித்ஷா இல்லத்துக்கு சென்றனர். இவர்கள் 3 தனித்தனி கார்களில் சென்றனர்.

அங்கு அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், மற்றவர்களும் அமித்ஷா இல்ல வளாகத்துக்குள் சிறிதுநேரம் நின்று பேசிவிட்டு அங்கிருந்து கலைந்தனர். முதலில் எம்.பி.க்களும், முன்னாள் அமைச்சர்களும் வெளியே வந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி, இரவு 9 மணி அளவில் வெளியே வந்தார். அவர் உள்ளே செல்லும்போது ஒரு காரிலும், வெளியே வரும்போது இன்னொரு காரிலும் வந்தார். வெளியே அவருக்காக காத்திருந்த பத்திரிகையாளர்களை அவர் சந்திக்கவில்லை. கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டே சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தது ஏன்: என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவியில் கூறியதாவது:-மாண்புமிகு இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான #பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story