கரூர் துயர சம்பவத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? - திருமாவளவன் கேள்வி


தினத்தந்தி 2 Oct 2025 12:06 PM IST (Updated: 2 Oct 2025 12:27 PM IST)
t-max-icont-min-icon

விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்?

விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார். மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக - அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது.

விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம். விஜய்யின் கொள்கை எதிரியான பாஜகவே அவரை பாதுகாக்க முயற்சிக்கிறது. பாஜக பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பாஜக முயல்கிறது.

விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story