செங்கோட்டையனின் கெடுவை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? - பரபரப்பு தகவல்கள்


செங்கோட்டையனின் கெடுவை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? - பரபரப்பு தகவல்கள்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 5 Sept 2025 11:58 AM IST (Updated: 5 Sept 2025 1:01 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை

"எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. இயங்கும்" என்ற இந்த வார்த்தை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் சூளுரைகளில் ஒன்று. ஆனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி அவர் மறைந்த பிறகு, அ.தி.மு.க.வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அக்கட்சி தொண்டர்களை சோர்வடையும் வகையிலேயே நடைபெற்றன என்று கூறலாம்.

ஜெயலலிதா மரணம் அடையும்போது, முதல்-அமைச்சர் பதவியில் இருந்தார். அதுவும் பதவியேற்று சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி காலம் இருந்த நிலையில், அவருடைய நிழலாக இருந்த சசிகலாவை முதல்-அமைச்சராக நியமிக்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தனர்.

ஆனால், அடுத்தடுத்து நடந்த திருப்பங்களால், ஆட்சி அரியணையில் ஏற வேண்டிய சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை செல்லும் முன்பு, முன்வரிசை அமைச்சர்களில் கடைசியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக அடையாளம் காட்டிவிட்டு சென்றார்.

அதன்பிறகு, முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஏற்ற நிலையில், ஆட்சி இப்போது கலைந்துவிடும்... அப்போது கலைந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் அளவிலேயே இருந்தது. துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும், கட்சியை ஓ.பன்னீர்செல்வமும் வழிநடத்தினர். எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்களுக்கு அப்போது அதிருப்தி இருந்தாலும், அதை வெளிக்காட்டினால் ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்ற காரணத்தால், அப்படியே அமைதிகாத்தனர். தனது முதல்-அமைச்சர் பதவியை கெட்டியாக பிடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தனது முழு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக முடித்தார்.

பிறகு, 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க. அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி தலைவராக யார் இருப்பது? என்ற போட்டி எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டது. அதையும் கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதுடன், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்றினார்.

அதன்பிறகு, உள்கட்சிக்குள் தனது பலத்தை எடப்பாடி பழனிசாமி அதிகரிக்கத் தொடங்கினார். சேலம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட எடப்பாடி பழனிசாமி, அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முயன்றார். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே பிரச்சினை வெடித்தது.

கட்சிப் பதவிகளில் செங்கோட்டையன் ஆதரவாளர்களை ஒதுக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இதனால், அதிருப்தி அடைந்த செங்கோட்டையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தபோதும் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை அவர் தவிர்த்தார்.

இப்படியே எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே பகை புகைந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு, செங்கோட்டையன், தான் மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்தார். அதற்காக குறிக்கப்பட்ட நாளான இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய அவர், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கருத்து தெரிவித்தார். மேலும் அதுகுறித்த முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விடுப்பதாகவும் அதிரடியாக தெரிவித்தார்.

கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் என்று செங்கோட்டையன் குறிப்பிட்டது, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரனைத்தான். அவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றாலும், சசிகலா ஏற்கனவே தெரிவித்த விருப்பத்தையே செங்கோட்டையனும் தற்போது முன்மொழிந்துள்ளார். ஆனால், செங்கோட்டையனின் கெடுவை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? என்று பார்த்தால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம், மேற்கண்ட 4 பேரும் எடப்பாடி பழனிசாமியை விட சீனியர்கள். அதுவும் சசிகலா, ஜெயலலிதாவின் நிழலாக இருந்து எடப்பாடி பழனிசாமியையும் வழிநடத்தியவர். எனவே, அவர்களை கட்சியில் இணைத்தால், தனது பொதுச்செயலாளர் பதவி பறிபோய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக தெரிகிறது. ஏற்கனவே, கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களும், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தன்னை கட்சியில் இருந்து ஓரங்கட்ட முற்படுவார்கள் என்றும் அவர் நினைக்கிறார்.

எனவே செங்கோட்டையனின் கெடு நிறைவேற வாய்ப்பே இல்லை என்றே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, 10 நாட்களுக்கு பிறகு செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வைப் பொறுத்தே, தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

1 More update

Next Story