வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா? - மு.க.ஸ்டாலின் பேச்சு

நாம் போராடுவது திமுக வெற்றிக்காக அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்காக என மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா? - மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

செங்கல்பட்டு,

திருவிடந்தையில் நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-

தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. நான் மட்டுமல்ல, திமுகவின் எதிரிகளே இதை பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் திமுக கட்டாயம் 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும். இதை வாங்க வேண்டியது நீங்கள்தான். ஒவ்வொருவரும் 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றால் வெற்றி உறுதி. ஸ்டாலின் மகளிர் படையில் உள்ள மகளிர், வீடு வீடாக பரப்புரை தொடங்க உள்ளனர். நானோ, மாவட்டச் செயலர்களோ என்னதான் உழைத்தாலும், அதை வெற்றியாக உறுதி செய்யப்போவது நீங்கள்தான். யார் வந்தாலும், தேர்தல் பரப்புரையின் உத்திதான் மிக முக்கியமானது.

ஒவ்வொருவரையும் குறைந்தபட்சம் 5 முறையாவது சந்தித்து பேச வேண்டும். தேர்தல் வந்துவிட்டாலே மக்கள்தான் எஜமானர்கள். திராவிட மாடல் திட்டங்களை கொண்டு சேருங்கள். மக்களிடம் ஆளுங்கட்சிக்கு ஆதரவான மனநிலை உள்ளது. அதை வாக்குகளாக மாற்றுங்கள். 2026ல் 200 தொகுதிகளை நம்மால் வெல்ல முடியும். அதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 100 வாக்காளர்களை அணுகுங்கள். நமக்கு வாக்களிப்பதை உறுதி செய்யுங்கள். திமுக எனும் ஆலமரத்தின் வேர்கள், அறிவாலயத்தில் அஸ்திவாரமும் நீங்கள்தான்.

ஒவ்வொரு வீட்டிலும் நமது சாதனையை எடுத்துச் சொன்னால், அவர்களே மகிழ்ந்து நம்மை வரவேற்பார்கள். நட்போடு, கலகலப்பாக மக்களிடம் பேசுங்கள். நாம் வந்தாலே சுயமரியாதை காக்கப்படும் என சொல்லுங்கள். நாம் என்னவெல்லாம் செய்தோம் என மக்களிடம் சொல்லும் முன்பு நமக்குத் தெரிய வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நகரில் பல பேருந்து நிலையங்கள் என பல பணிகளைச் செய்துள்ளோம்.

5 ஆண்டில் நிறைவேற்றிய திட்டங்களே 50 ஆண்டுக்கு தமிழ்நாட்டை வழிநடத்தும் புளூ பிரிண்ட். சாதனை செய்யாத துறையே இல்லை, அனைத்து தரப்புக்கும் செய்துள்ளோம். திமுக வந்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழ்நாடு உலக நாடுகளுக்கு இணையாக வளரும் எனச் சொல்லுங்கள். வேறு யார் வந்தாலும், தமிழ்நாட்டில் திமுக தான் ஆரும் எனச் சொல்லுங்கள்.

வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என முடுவு செய்யப்போவது இந்த தேர்தல். தமிழ்நாட்டை காக்க எல்லோரும் திமுகவை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை சொல்ல வேண்டும். வெறுப்பை விதைத்து அதன் மூலம் வெற்றி பெறத் துடிக்கும் விஷ விதைகளை தமிழகத்தில் விடக்கூடாது. நாம் போராடுவது திமுக வெற்றிக்காக அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்காக. டெல்லி பாஜகவின் டப்பா என்ஜினுக்கு முன்பாக, திராவிட மாடல் சூப்பர் என்ஜின் தலை குனியாது. என் சக்தியை மீறி உழைப்பேன் என கூறியதுபோல் ஓய்வின்றி உழைத்து வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com