பெண் மர்ம சாவில் திருப்பம்: மகளே அடித்து கொலை செய்தது அம்பலம்


பெண் மர்ம சாவில் திருப்பம்: மகளே அடித்து கொலை செய்தது அம்பலம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 14 Dec 2025 12:51 PM IST (Updated: 14 Dec 2025 1:03 PM IST)
t-max-icont-min-icon

நிலத்திற்காக தாயை கணவருடன் சேர்ந்து மகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதூர்நாடு அருகே நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மனைவி சின்னகாளி (40 வயது). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு காளீஸ்வரி, கீதா (22 வயது) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி சென்றுவிட்டனர். சாம்பசிவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சின்னகாளி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சின்னகாளி தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் தலையில் படுகாயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் மர்ம சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், சின்னகாளியின் 2-வது மகள் கீதா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், கீதா, தனது கணவரான சிதம்பரத்துடன் (32 வயது) சேர்ந்து சின்னகாளியை கொலை செய்ததாக கூறினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கீதாவை நடுகுப்பத்தில் உள்ள சிதம்பரம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். நடுகுப்பம் பகுதியில் சின்னகாளியின் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா பெறுவதற்காக சின்னகாளி முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது கீதா இந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா எழுதி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் சின்னகாளி கொடுக்க மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி இரவு கீதா, சின்னகாளியை அழைத்து கொண்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த சிதம்பரமும், கீதாவும் சின்னகாளியிடம் நிலத்தின் பட்டாவை தங்கள் பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் சின்னகாளி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிதம்பரம், கீதா ஆகியோர் சேர்ந்து கல்லால் சின்னகாளியை தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து உள்ளனர் என போலீசார் கூறினர்.

இதையடுத்து கீதா, சிதம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான கீதா, சிதம்பரம் ஆகியோருக்கு 2 மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நிலத்திற்காக தாயை கணவருடன் சேர்ந்து மகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story