

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்து 184 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1,579 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 299 ஆக உயர்ந்துள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு
இதில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 106 தெருக்கள், திருக்கோவிலூர், சின்னசேலம், வடக்கனந்தல், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய பேரூராட்சியில் 15 வார்டுகள் மற்றும் 10 கிராமங்கள் நோய் தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் யாரேனும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.