கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா, ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு பூசாரிகள் தாலி கட்டினர் - இன்று தேரோட்டம்

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் ஆயிரக் கணக்கான திருநங்கைகளுக்கு பூசாரிகள் நேற்று தாலி கட்டினர். இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா, ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு பூசாரிகள் தாலி கட்டினர் - இன்று தேரோட்டம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

திருவிழாவை காண தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கூவாகம் பகுதிகளில் வந்து குவிந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று காலையில் நடைபெற்றது. பின்னர் கூத்தாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. ஆயிரக்கணக் கான திருநங்கைகள் புதிய பட்டு சேலை, தங்க நகைகள், கவரிங் நகைகள், கை நிறைய வளையல்கள் அணிந்து, தலை நிறைய பூ வைத்து மணப்பெண் போன்று தங்களை அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.

அங்கு கூத்தாண்டவரை வழிபட்டு கோவில் பூசாரிகள் கையால் தாலி கட்டிக்கொண்டனர். மேலும் சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களும் கூத்தாண்டவரை வேண்டுதலின் பேரில் தாலி கட்டிக்கொண்டனர். இதையடுத்து திருநங்கைகள் தங்களுக்கு திருமணமான மகிழ்ச்சியை கும்மி அடித்தும், ஆடிப்பாடியும் வெளிப்படுத்தினர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வழக்கத்தைவிட இந்த ஆண்டு கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

விழாவின் 16-வது நாள் நிகழ்ச்சியாக இன்று காலை (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com