

விதானசவுதா,
கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகத்தில் கதர் ஆடைகள் விற்பனையை அதிகரித்து அதன் மூலம் நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாதந்தோறும் முதல் வார சனிக்கிழமை நாளில் அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடையை கட்டாயம் அணிய வேண்டும் என்றும், ஆண் ஊழியர்கள் பேண்ட், சட்டையும், பெண் ஊழியர்கள் சேலை அல்லது சுடிதாரை கதர் ஆடையில் அணிய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவை ஏற்றுக் கொள்வதாக கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சடாக்சரி கூறியுள்ளார். கதர் ஆடைகளை அரசின் காதி கிராமயோக் கடைகளில் வாங்க வேண்டும் என்றும், அங்கு வாங்கும் கதர் ஆடைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.