திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாநில தலைவர் காண்டீபன், பொதுசெயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முத்தையா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். முசிறி வட்டத்தில் 13 கிராம உதவியாளர்களை பழிவாங்கும் நோக்குடன் பணியிட மாற்றம் செய்த அதிகாரியை கண்டித்தும், கிராம உதவியாளர்களை தரக்குறைவாக பேசி வரும் முசிறி கோட்டாட்சியரை கண்டித்தும், கிராம உதவியாளர்களுக்கு இரவு நேர பணியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் சிவசங்கர், துணை செயலாளர் பெரியசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணை தலைவர் இமானுவேல் வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.