நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நாத்திகன் வரவேற்றார். மாநில தலைவர் ராஜசேகர் கலந்துகொண்டு பேசினார்.
சிறப்பு காலமுறை ஊதிய முறையை நீக்கிவிட்டு, காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
அரசு துறையில் டி பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஆண்டுதோறும் கிராம உதவியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை கிராம நிர்வாக பணியை தவிர மாற்றுபணிகளுக்கு பயன்படுத்த கூடாது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியமர்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்பட கிராம உதவியாளர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட தலைவர் ரத்தினவேல் நன்றி கூறினார்.