சேற்றில் நடந்து சென்று உழந்தை ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு

சேற்றில் நடந்து சென்று உழந்தை ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார்.
Published on

புதுச்சேரி,

புதுவையில் இருக்கும் போது வார விடுமுறை நாட்களில் சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வதில் கவர்னர் கிரண்பெடி ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி நேற்று புதுவை உழந்தை ஏரியில் ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

105 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் ஆய்வுப் பணியின்போது கலெக்டர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் கவர்னரின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கவர்னர் ஆய்வுக்கு சென்றபோது மழை பெய்து ஏரியின் கரை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அவற்றுக்கு இடையே அதிகாரிகள் துணையுடன் கவர்னர் கிரண்பெடி நடந்து சென்று பார்வையிட்டார்.

ஏரியின் கிழக்கு கரையில் பைபாஸ் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியினை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுத்து நீர் சேகரிப்பினை வலுப்படுத்த கவர்னர் கிரண்பெடி கேட்டுக்கொண்டார்.

சமூக பங்களிப்பு நிதி, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி, பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

ஏரியின் வடக்குப்பகுதியில் செல்லும் வாய்க்காலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கவர்னர் கிரண்பெடி எடுத்துக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com