'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?

வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேவேளை, கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று படிப்படியாக வீரியம் பெற்று இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ’மோந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.
புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், உலகம் முழுவதும் கடல்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்தில் உள்ள கடலுக்கும் வெவ்வேறு பெயர் உள்ளது. உலகில் ஒரே நேரத்தில் பல கடல்களில் புயல்கள் உருவாகின்றன. இதுகுறித்து, மக்களுக்கும், கடலில் செல்லும் கப்பல், படகுகளுக்கு எளிதாக புரியும் படி சொல்வதற்காக புயல்களுக்கு பெயரிடும் முறை நடைமுறைக்கு வந்தது.
அந்த வகையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள தற்போதைய புயலுக்கு 'மோந்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சூட்டியது, தாய்லாந்து நாடு ஆகும். 'மோந்தா' என்பது பெண் பெயரை குறிப்பிடுகிறது. 'மணமிக்க மலர்' அல்லது 'அழகான பூ' என்று அர்த்தம் தருகிறது.
'மோந்தா' புயல் ஆந்திர மாநிலம் கடல் பகுதியில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோந்தா புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்து வரும் புயலுக்கு 'சென்யார்' என்றும், அதற்கடுத்து வரும் புயலுக்கு 'தித்வா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதில், 'சென்யார்' என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகமும், 'தித்வா' பெயரை ஏமன் நாடும் சூட்டியுள்ளது.






