

சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி கள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 18-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதேபோல, வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 19, 20 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 19-ந்தேதி வரையில் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.