புதுவையில் ஒரு மேம்பாலத்தை கூட கட்ட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர் ரங்கசாமி குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் ஒரு மேம்பாலத்தை கூட கட்ட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.
Published on

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று மாலை ஊசுடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். சேதராப்பட்டு, மயிலம் சாலை சந்திப்பில் திறந்த வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை நிறுத்தியுள்ளோம். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். ஊசுடு தொகுதியில் அதிக வாக்குகள் நமக்கு கிடைக்க வேண்டும். நமது கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. நமது தேர்தல் பணி சட்டமன்ற தேர்தலை சந்திப்பதைப்போல் இருக்க வேண்டும். இது நமக்கு முக்கியமான தேர்தல்.

கடந்த 3 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். குப்பை வரி, குடிநீர் வரி, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு ஆகியவைகளை நாங்கள் செய்யவில்லை. அனைத்து வரிகளையும் கவர்னர் தான் உயர்த்தினார் என்று ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர். அனைத்தையும் கவர்னர் செய்கின்றார் என்றால் காங்கிரசார் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும். எங்களால் முடியவில்லை என்று வெளியே போகவேண்டியதுதானே.

சரியாக ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். ஒரு மேம்பாலம் கூட கட்ட முடியாத நிலையில் உள்ளனர். மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தாமல் உள்ளனர். ரேஷன் கடையை திறக்க முடியவில்லை. புதுச்சேரி என்ன ஆனது என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

என்னை மூடுவிழா நாயகன் என்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூறுகின்றார். நான் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்தவன். ரோடியர் மில், சுதேசி, பாரதி பஞ்சாலைகளுக்கு தலைவர்களை நியமித்து இயக்கினோம். கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பியிருக்கும் தொழிலாளர்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் சிரமத்துடன் நடத்தி வந்தோம். தற்போது ஒவ்வொன்றாக மூடிவிட்டு என்னை மூடுவிழா நாயகன் என்று கூறுகின்றனர். புதுவையில் நல்ல ஆட்சி அமைய ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சேதராப்பட்டு, கரசூர், தொண்டமாநத்தம், துத்திப்பட்டு, கூடப்பாக்கம், பத்துக்கண்ணு, சேந்தநத்தம் ஆகிய கிராமங்களில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன், வைத்தியநாதன், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சாய் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com