வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: - பி.என்.பி ஆட்சி அமைக்கிறது

ஆரம்ப கட்ட நிலவரப்படி தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) முன்னிலை பெற்றுள்ளது.
Photo Credit: PTI/AP
Photo Credit: PTI/AP
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் இன்று காலை 7.30 மணிக்கு பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. 350 தொகுதிகளை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார முறையில் தேர்வு செய்யப்படும்.தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. மேலும் சில கட்சிகளும் களத்தில் உள்ளன.தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 9.58 லட்சம் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 42,779 வாக்குச்சாவடி மையங்களில் 90 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக தலைநகர் டாக்காவில் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேபோல் நாடு முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். டாக்கா-17 தொகுதியில் போட்டியிடும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் தாரிக் ரகுமான் தனது வாக்கை பதிவு செய்தார். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரகுமான் வாக்களித்தார். தேர்தலில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இருந்தபோதிலும் சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. போகுரா பகுதி வாக்குச்சாவடி அருகே பி.என்.பி. கட்சியின் மாணவர் தலைவர் மிலோன் மியா கத்தியால் குத்தப்பட்டார்.பரிசாலின் பாபுகஞ்ச் உபாசிலா பகுதியில் பணம் மற்றும் தேர்தல் சீட்டுகளுடன் திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சில மாவட்டங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.வாக்குப்பதிவு மாலை 4.30 மணியளவில் முடிந்தது. உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்குகியது. ஆரம்ப கட்ட நிலவரப்படி தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலின் முழுமையான வெற்றி விவரம் நாளை தெரியவரும்.

மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் கலீதா ஜியா மறைவுக்குப் பிறகு, அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போதைய நிலவரப்படி வைத்து பார்த்தால் தாரிக் ரகுமான் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. வங்காளதேச நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன. இதில் தனிப்பெரும்பான்மையை பெற 151 இடங்களை கைப்பற்றுவது அவசியம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com