

வங்காளதேசத்தின் 13-வது நாடாளுமன்ற தேர்தல் பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறும் என்று இடைக்கால அரசு அறிவித்தது. தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்த அவருடைய மகன் தாரிக் ரகுமான், 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் நாடு திரும்பினார்.
இந்த சூழ்நிலையில் வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் 10 லட்சம் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் நடந்தது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. சுயேச்சைகள் உள்பட 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சிக்கும், பாகிஸ்தானுக்கு ஆதரவான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. 59.44 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், நேற்று மாலை நிலவரப்படி, வங்காளதேச தேசியவாத கட்சி 200-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் சில தொகுதிகளில் முன்னிலை வகித்தது. எனவே, அக்கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளது
வங்காளதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்றால், கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் பிரதமர் ஆவார் என்று தேர்தலுக்கு முன்பே அக்கட்சி அறிவித்திருந்தது. எனவே, புதிய பிரதமராக தாரிக் ரகுமான் பதவியேற்பார் என்று தெரிகிறது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு நாடுகடத்த வேண்டும் என்று வங்காளதேச தேசியவாத கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் சலாவுதீன் அகமது கூறியதாவது:
“ஷேக் ஹசீனாவை முறையான விசாரணைக்கு உட்படுத்த வங்காளதேசத்திற்கு நாடுகடத்த இந்தியாவை எங்கள் கட்சி முறையாக வலியுறுத்தும். வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே இந்த விவகாரத்தை முன்னெடுக்க தொடங்கியுள்ளார். சட்டப்படி அவரை நாடுகடத்துமாறு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இந்த விவகாரம் எங்கள் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான பிரச்னையாகும். வங்காளதேசத்தில் விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் அவரை (ஷேக் ஹசீனா) திருப்பி அனுப்புங்கள் என்று இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளோம். இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் சமமான நட்புறவுகளை வங்காளதேசம் விரும்புகிறது” என்று கூறினார்.