

கராகஸ்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும், வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது அமெரிக்க சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, எண்ணெய் வளத்திற்காக வெனிசுலா குறி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில், வெனிசுலாவில் தனியார் எண்ணெய் கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், அந்நாட்டின் ஹைட்ரோகார்பன் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வெனிசுலா அரசின் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் வெனிசுலாவின் லாபகரமான எண்ணெய் துறையில் சுதந்திரமாக கால்பதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் கையெழுத்திட்ட பிறகு, அந்நாட்டின் எண்ணெய் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வெனிசுலாவின் எண்ணெய் துறை மீதான அமெரிக்க அரசின் வர்த்தக தடைகளை டிரம்ப் நீக்கியுள்ளார். இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.