

வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும் தலீபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை தங்களின் பிடிக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் தலைமையில் புதிய இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன.
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச கூட்டத்தில் ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை தலீபான் நிர்வாகிகள் குழுவினர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ், மனிதாபிமான பேரழிவைத் தடுக்க, சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு, ரஷ்யா மனிதாபிமான அடிப்படையில் 3 விமானங்களில் 36 டன் எடை கொண்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானங்கள் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சென்றடைந்தன.