

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டிருக்கிறார். இந்த தேர்தலில் சீனாவின் தலையீடு இருக்கும் என்றும் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான வேலைகளை அந்த நாடு செய்யும் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் ஜோ பைடன் சீனாவின் விசுவாசி என்றும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமெரிக்கா, சீனாவின் வசம் ஆகும் என்றும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் திபெத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது திபெத் மீதான கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்குவதற்கான திட்டங் களை சீன அரசு சமீபத்தில் அறிவித்திருப்பதை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திபெத்திய மக்களின் மனித உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் கவுரவத்தை தொடர்ந்து சீனா சீர்குலைக்கிறது. சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகள் தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் நம்பிக்கையை பாதுகாக்க முற்படும் சிறுபான்மையினரை நசுக்கும் முயற்சியாகும்.
நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் எனது நிர்வாகம் திபெத்தில் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான சீன அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கும். வீடியோ பிரீ ஆசியா மற்றும் வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் திபெத்திய மொழி சேவைகளை விரிவு படுத்துவேன். இதன் மூலம் வெளியுலகத்தில் இருந்து தகவல் களை திபெத்துக்குள் பெறலாம்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தலாய்லாமாவை சந்திப்பேன். திபெத்திய பிரச்சினைகளை ஆராய புதிய சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பேன். அமெரிக்க தூதர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட அமெரிக்க குடிமக்கள் திபெத்தை எளிதாக அணுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவேன்.
திபெத் விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப் கண்மூடித்தனமாக உள்ளார். ஆனால் பைடன்-ஹாரிஸ் நிர்வாகம் திபெத் மக்களுக்காக நிற்கும். சீன கொள்கையில் டிரம்ப் பலவீனமானவர். டிரம்ப் சீனாவுடனான வெற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துகிறார். அதேசமயம் சீன அதிபர் ஜின்பிங் உடனான நல்ல நட்பை பாதுகாக்கிறார்.
தலாய்லாமாவை சந்திக்கவும் பேசவும் இல்லாத முதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்பது அவமானகரமானது. திபெத் பிரச்சினையில் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தலைமை தாங்க சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற சட்ட ரீதியான தேவையை கூட டிரம்ப் பூர்த்தி செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
1959-ம் ஆண்டு திபெத்தை சீனா கட்டுக்குள் கொண்டு வந்ததும், 13-ம் நூற்றாண்டில் இருந்து திபெத் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்று சீனா கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.