அமெரிக்கா: தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி பலி


அமெரிக்கா: தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி பலி
x

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டன்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (வயது 24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், சஹாஜா தங்கி இருந்த வீட்டில் நேற்று முன் தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சஹாஜா உள்பட சக மாணவிகள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் வீட்டிற்குள் சிக்கியிருந்தவர்களை போராடி மீட்டனர். இந்த தீ விபத்தில் சஹாஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. சக மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சஹாஜாவுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சஹாஜா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சஹாஜாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சி எடுத்துள்ளது. அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story