பெர்செவரன்ஸ் ரோவர் மூலம் ஆய்வு; செவ்வாய் கிரகத்தில் பழமையான பாறைகள் கண்டுபிடிப்பு

நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்து அசத்தி இருக்கிறது.
பெர்செவரன்ஸ் ரோவர் மூலம் ஆய்வு; செவ்வாய் கிரகத்தில் பழமையான பாறைகள் கண்டுபிடிப்பு
Published on

வாஷிங்டன்,

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ என்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தின் மூலம் ஒரு கார் அளவிலான பெர்செவரன்ஸ் என்ற ரோவரை உருவாக்கியது. இந்த ரோவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த ரோவர் தரை இறங்கியது முதல் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆய்வு செய்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்து அசத்தி இருக்கிறது. இந்தப் பாறைகள் அடிப்படையில் எரிமலை தோற்றம் கொண்டவை, அதிலும் குறிப்பாக அவை ஒருவேளை எரிமலை குழம்பின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

இந்த திட்டத்தில் இந்த பாறைகளை பெர்செவரன்ஸ் ரோவர் கண்டறிந்து இருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப் பாறைகளின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படுகிறபோது அவை எந்தக் காலத்தில் தோன்றியவை என்பதை கண்டு பிடித்து விட முடியும்.

இது செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பரந்த அளவிலான சூரிய குடும்பத்தின் வரலாறு பற்றிய நமக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு கனிந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com