ஈரான் அடிபணியும் நாடு இல்லை: காமேனி எக்ஸ் பதிவால் பரபரப்பு


ஈரான் அடிபணியும் நாடு இல்லை:  காமேனி எக்ஸ் பதிவால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jun 2025 6:10 AM (Updated: 24 Jun 2025 7:06 AM)
t-max-icont-min-icon

கத்தாரில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்திய பின்னர், காமேனியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஈரான் கூறியது.

இதனையடுத்து, இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை வெளியிட்டார். இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் உலக நாடுகள் விமர்சனங்களை வெளியிட்டன. ஒரு சில நாடுகள் நடுநிலையாக இருந்து விட்டன.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி கூறும்போது, போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை என கூறினார்.

போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது பற்றி ஈரானே முடிவு செய்யும். இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், அதன்பின்னர் போரை தொடருவதற்கான எந்தவித உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்திய பின்னர், காமேனியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளன என டிரம்ப் கூறியுள்ள சூழலில், அதற்கு முன்பே ஈரான் தலைவரின் இந்த அறிவிப்பு வெளிவந்து இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரான் மந்திரி அராக்சியும் போர்நிறுத்தம் பற்றிய டிரம்பின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். கத்தாரை தொடர்ந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதியிலும் மர்ம டிரோன்கள் தாக்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

1 More update

Next Story