பாலஸ்தீன கைதிகளுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை; இஸ்ரேல் அரசு மீது கோர்ட்டு அதிருப்தி

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது.
ஜெருசலேம்,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, போர் தொடங்கியதுமுதல் ஹமாஸ் ஆதரவாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேவேளை, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகள் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், போர் தொடங்கியபின் இஸ்ரேல் சிறைகள் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், உணவின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் சுப்ரீம் கோர்ட்டில் மனித உரிமை அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு அரசு போதிய உணவு வழங்குவதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. மேலும், சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளின் ஊட்டச்சத்து மேம்படும் வகையிலான உணவுகளை வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






