

கொழும்பு,
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மக்களுக்கு ஆதரவாக முன்வந்துள்ளார்.
ஒருபுறம் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.மறுபுறம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வருகிறது. சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி காரணமாக இலங்கை அரசாங்கத்தின் வருமானமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கி, பெரும் மின்வெட்டுக்கு வழிவகுத்துள்ளது.
இதனால் அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கத்தை காரணம் காட்டுகிறார்கள்.
இந்த நிலையில், இலங்கை நிலவரம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"மக்கள் இப்படி வாழ முடியாது. இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, 10-12 மணி நேரம் மின்சாரம் இல்லை.இந்த நாட்டு மக்களுக்கு இது மிகவும் கடினமாக உள்ளது. அதனால்தான் மக்கள் வெளியே வந்து போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
எனது சொந்த மக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடும்போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.இந்த நிலைமை சரியாக கவனிக்கப்படாவிட்டால், இது ஒரு பேரழிவாக இருக்கும்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துங்கள், வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்று நான் கூற விரும்புகிறேன்.
உண்மையான மக்கள் வெளியில் வந்து தாங்கள் பாதிக்கப்படுவதாக அரசாங்கத்திடம் கூறும் போராட்டம் தான் இது.
இலங்கை மக்கள் அன்றாட தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். டீசல், கேஸ், பால் பவுடர் போன்றவற்றுக்கு 3-4 கிலோ மீட்டர் வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.இது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இந்த நேரத்தில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால்தான் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட முன்வந்தனர்.
இப்போதைக்கு பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கே உள்ளது. முன்னதாக, இலங்கை மக்களுக்கு அதன் மீது மிகுந்த நம்பிக்கையும் இருந்தது. ஆனால், கடந்த, 3 முதல் 4 மாதங்கள் தற்போதைய அரசாங்கம் நடைபெறுவதற்கு சிறந்த நேரமாக அமையவில்லை. துரதிஷ்டவசமாக, இவையனைத்திற்கும் தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு அவர் வருத்தத்துடன் கூறினார்.