பயிர்களை செழிக்க வைக்கும் தட்சிணாயனம்

சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே ‘தட்சிணாயன’ காலமாகும்.
பயிர்களை செழிக்க வைக்கும் தட்சிணாயனம்
Published on

ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்து, தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயன புண்ணிய காலம் என்று அழைக்கிறார்கள். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயன காலமாகும்.

'தட்சண' என்றால் வடமொழியில் 'தெற்கு' என்று பொருள். `அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே 'தட்சிணாயன' காலமாகும். ஆடி முதல் நாளன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறு மாத காலம், தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் பஜனை பாடி தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

'உத்தர்' என்றால் வடமொழியில் 'வடக்கு' என்று பொருள். `அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையில் இருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே 'உத்தராயனம்' எனப்படும். இந்த ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயனம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயனம் மிகவும் புனிதமான காலமாகும். உத்தராயனமும், தட்சிணாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றுவது, புவியானது தனது அச்சில் இருபத்து மூன்றரை பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வருவதால் தான். அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.

இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதத்தை 'சக்தி மாதம்' என்றும் பண்டைய ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்தராயன காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயன காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'ஆடி செவ்வாய் தேடிக்குளி' என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com