

சேலம்,
சேலம் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து 13-ந் தேதி பகல் பத்து தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி பெருமாள், தாயார், ஆண்டாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு தங்க கவசம் சாத்தப்படுகிறது. அன்று இரவு 8 மணிக்கு இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. சொர்க்க வாசல் திறப்பு தினத்தன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
பக்தர்கள் வசதிக்காகவும், அவர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யவும் கோவிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி சரவணன், அறங்காவலர்கள் சுந்தரகோபால், சுரேஷ்பாபு, அறிவழகன், குணசேகரன், செயல் அலுவலர் அனிதா ஆகியோர் செய்து வருகின்றனர்.