மனதை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும்

“சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.
மனதை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும்
Published on

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார்.

அவர் அந்த துறவியிடம், சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.

அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு ஒன்று வந்தது. வியாபாரிக்கு உணவளிக்க விரும்பிய துறவி, தன் காலடியில் இருந்த ஒரு கம்பை எடுத்து, குரங்கின் தலையில் ஒரு அடி அடித்து விட்டு, வந்திருப்பவர்களுக்கு இலை போடு என்றார். குரங்கு வாழை இலையை எடுத்து வந்து போட்டது.

துறவி மீண்டும் தன் கையில் இருந்த கம்பால் குரங்கின் தலையில் அடித்து விட்டு சாப்பாடு எடுத்து பரிமாறு என்றார். குரங்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாறியது. அதன்பிறகும் அந்த குரங்கின் தலையில் ஒரு அடி வைத்தார், துறவி.

இப்போது வியாபாரிக்கு வருத்தமாக இருந்தது. துறவியிடம், சுவாமி.. நீங்கள் சொல்வதை எல்லாம் அந்தக் குரங்கு செய்துகொண்டுதானே இருக்கிறது. பிறகு எதற்காக அதை அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

ஆனால் அதற்கு துறவி எந்த பதிலும் சொல்லவில்லை. சற்றே புன்னகைத்துவிட்டு, தன் கையில் இருந்த சிறிய கம்பை, தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் ஒளித்து வைத்தார்.

சற்று நேரம் அமைதியாக இருந்த குரங்கு, இப்போது அங்கும் இங்கும் தாவியது, வியாபாரி சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையில், தன்னுடைய வாலை விட்டு ஆட்டியது. வியாபாரியின் தோளில் அமர்ந்து கொண்டு அவரது காதைப் பிடித்து திருகியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை இரண்டாக கிழித்துப் போட்டது.

அதன் சேட்டையைப் பொறுக்க முடியாத வியாபாரி, சுவாமி... இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை. அடி போடுங்கள் என்றார்.

உடனே துறவி, தான் மறைத்து வைத்திருந்த கம்பை எடுத்து குரங்கின் தலையில் அடித்தார். அதுபோய் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து கொண்டது.

இப்போது துறவி சொன்னார். இந்தக் குரங்கைப் போலத்தான் மனித மனங்களும். நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது. ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார் துறவி. அதைக்கேட்டு வியாபாரி மனம் தெளிந்து புறப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com