பஞ்சம் போக்கும் பத்மநாபா ஏகாதசி

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், அனைத்து ஏகாதசிகளும் வைகுண்ட பதவிக்கு வழிவகுக்கும் என்பதே இந்த விரதத்தின் சிறப்பாகும்.
பஞ்சம் போக்கும் பத்மநாபா ஏகாதசி
Published on

அமாவாசை, பவுர்ணமிக்கு பின்னர் வரும் 11-வது திதியை 'ஏகாதசி' என்று அழைக்கிறோம். வளர்பிறை, தேய்பிறை என்று மாதத்திற்கு இரண்டு ஏகாதசி விரதங்கள் வருகின்றன. அதன்படி ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகளும், ஒரு சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. அந்த 25 ஏகாதசிகளுக்கும் தனித் தனி பெயர்கள் உள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், அனைத்து ஏகாதசிகளும் வைகுண்ட பதவிக்கு வழிவகுக்கும் என்பதே இந்த விரதத்தின் சிறப்பாகும்.

இதில் புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'பத்மநாபா ஏகாதசி' என்று பெயர். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம், நாம் இந்திரன் மற்றும் வருணனின் அருளைப் பெறலாம். மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. நம் வீட்டில் இருக்கும், கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தைச் சோந்த மன்னனான மாந்தாதா என்பவர், தர்மம் தவறாமல் ஆட்சி செலுத்தி வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் அனைவரும் உணவு, உடை, பொருளுக்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் ஒரு முறை அவரது நாட்டில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழையே பெய்யவில்லை. வறட்சியும், பஞ்சமும் மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்த காரணத்தால், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் அனைவரும் உணவு கிடைக்காமல் தவித்தனர். இதையடுத்து மன்னனிடம் நேரில் சென்று முறையிட்டனர்.

மக்களின் நிலை கண்டு மன்னன் மிகவும் மனம் வருந்தினார். மக்களின் பஞ்சம் போக்க என்ன செய்வது என்று அறியாமல் திணறினார். தான் எந்த தவறும் செய்யாத பட்சத்தில், தன் நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய துன்பம் விளைந்தது ஏன் என்று புரியாமல் தவித்தார். இதுபற்றி அறிவதற்காக காடுகளில் தவம் செய்து வரும் சாதுக்களைக் காண்பதற்காக, மன்னன் தன்னுடைய சேனைகளுடன் காடு, காடாக திரிந்தான். அப்போது அவருக்கு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ஆங்கிரச முனிவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம், தன் நாட்டு மக்களின் நிலையைச் சொல்லி, தங்களின் துயரம் நீங்க வழி கேட்டார்.

அவர் புரட்டாசி வளர்பிறையில் வரும் பத்மநாபா ஏகாதசியை மக்களும், மன்னனும் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படியே தன்னுடைய நாடு திரும்பிய மன்னன், மக்கள் அனைவரையும் பத்மநாபா ஏகாதசியை கடைப்பிடிக்க வலியுறுத்தியதுடன், தானும் அவ்விரதத்தை அனுஷ்டித்தார். இதன் விளைவாக நாட்டில் வறட்சி, பஞ்சம் நீங்கி, சுபீட்சம் ஏற்பட்டது. இவ்விரதம் இருப்பதால் மழைக் கடவுள்களாக வர்ணிக்கப்படும் இந்திரன், வருணனின் அருள் கிடைக்கும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதுடன், தண்ணீரால் ஏற்படும் அழிவுகளில் இருந்தும் இந்த விரதம் நம்மை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாகும்.

இந்த விரதம் இருப்பவர்கள், முதல் நாள் தசமியன்று விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்றைக்கு மதியம் ஒருவேளை சாப்பிடலாம். இரவில் சாப்பிடக் கூடாது. முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். அடுத்தநாள் காலையில் நீராடி, பகவானுடைய திருநாமங்களைச் சொல்லிக் கொண்டு, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய தோத்திர நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். ஏகாதசி விரதத்தின்போது நல்ல மணமிக்க மலர்களைக் கொண்டு பெருமாளை அர்ச்சனை செய்யவேண்டும். என்னென்ன மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை பெரியாழ்வார் ஒரு பாசுரமே பாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com