ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்

அதிகாலையில் நடந்த வாகன சேவையின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்பு வாகன சேவைகள் நடைபெறுகின்றன. இன்று ஒரே நாளில் ஏழுமலையான் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அதன்படி, அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணிக்கு பிறகு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பகல் 2 மணி முதல் 3 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.

அதன்பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனம், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனம், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருள்கிறார்.

பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com