பழனி முருகன் சில தகவல்கள்

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் மூன்றாவதாக வைத்து போற்றப்படுவது, ‘பழனி’. இங்குதான் போகர் என்னும் மகா சித்தரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்ட முருகன் சிலை இருக்கிறது.
பழனி முருகன் சில தகவல்கள்
Published on

இதனை செய்து முடிக்க போகருக்கு 9 வருடங்கள் பிடித்ததாம். இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் சில சிறப்புகளை இங்க பார்க்கலாம்.

இத்தல முருகப்பெருமானுக்கு தினமும் ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படும். இந்த நிகழ்வானது, 5 முதல் 7 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், அதன்பிறகு அடுத்த அபிஷேகம் வரை முருகனுக்கு மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ நடைபெறாது.

தண்டம் தாங்கி ஆண்டிக் கோலத்தில் இருக்கும் இத்தல இறைவனுக்கு 'தண்டாயுதபாணி' என்று பெயர். இவருக்கு, சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய் ஆகிய நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும், அபிஷேகத்தில் பன்னீரும் சேர்க்கப்படும். இந்த அபிஷேகப் பொருட்களில், சந்தனம், பன்னீர் தவிர மற்றவை அனைத்தும், தண்டாயுதபாணியின் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்படும். அவரை முழுமையாக அபிஷேகிப்பது சந்தனமும், பன்னீரும் மட்டும்தான்.

நவபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் சிலை, மிகவும் சூடாக இருக்கும். எனவே இரவு முழுவதும் அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிஷேகம் நடை பெறும்போது, அங்கு வரும் பக்தர் களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் அணிவிக்கப்பட்ட ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம் ஆகும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில், ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. இந்த மரகத லிங்கத்தை தரிசிக்க, வலதுபக்கமாக சென்று தீபம் காட்டுதல் வேண்டும். தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னிதியிலும், இன்னொன்று போகர் சமாதியின் மேலும் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com