திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியக்கால பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்திருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது. அதாவது பிருங்கி முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார்.

ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர்.

அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரரும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (வியாழக்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது. விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com