விவசாயிகளுக்கு பேரிடியான வர்த்தக ஒப்பந்தம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கினால், மீண்டும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா மிரட்டியுள்ளது.
விவசாயிகளுக்கு பேரிடியான வர்த்தக ஒப்பந்தம்
Published on

நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதன்படி, இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத பரஸ்பர வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அமெரிக்கா எச்சரிக்கை மணியும் அடித்துள்ளது. இந்தியா இனியும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கினால், மீண்டும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளது.

இந்த இடைக்கால ஒப்பந்தத்தில் சில சாதகங்களும் இருக்கிறது. அதேசமயத்தில் பாதகங்களும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தபிறகு இந்தியாவில் இருந்து ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

அதேபோல அமெரிக்க பொருட்களும் வரியில்லாமல் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதில் இந்தியாவுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்னவென்றால், இதுவரை எந்த நாட்டுக்கும் வேளாண் சந்தையை திறக்க அசைந்து கொடுக்காமல் இருந்த இந்தியா இப்போது முதல்முறையாக அமெரிக்காவுக்கு வேளாண் சந்தையை தாராளமாக திறந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வேளாண்பொருட்களை இறக்குமதி செய்தால் இந்தியாவில் அதிக செலவு செய்து விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களோடு விற்பனையில் போட்டிப்போடமுடியாது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.

இந்திய விவசாய சந்தைக்குள் வெளிநாடுகளால் நுழையமுடியாமல் இருந்தது. ஆனால் இப்போது முதல்முறையாக கையெழுத்தாகும் நிலையில் உள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின்மூலம் இந்தியா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வேளாண்பொருட்களுக்கு வரி தளர்வு கொடுத்துள்ளதாக இந்திய விவசாயிகள் கொதித்து எழுந்துள்ளனர். இதற்காக நாளை (வியாழக்கிழமை) அவர்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பலநாட்களாக டெல்லி எல்லையில் இரவும், பகலும் போராட்டம் நடத்திய பஞ்சாப் விவசாயிகள்தான் இதை எதிர்ப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். இப்போதைய ஒப்பந்தத்தின்படி கால்நடைகள் மற்றும் கோழி தீவனங்களை தயாரிக்க முக்கிய பொருளாக விளங்கும் சோளம், சோயாபீன்ஸ், சிவப்பு சோளம் போன்ற பல தானியங்களும் ஆப்பிள், வால்நட், பாதாம் போன்றவற்றையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் வரிகுறைப்புடன் இறக்குமதி செய்வது இந்திய விவசாயிகளுக்கு பெரும் இடியாக விழும் என்று கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாசலபிரதேச விவசாயிகள் ஆப்பிள் சாகுபடியை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை வகுக்கிறார்கள். இப்போதைய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை மதிப்பிட்டால் ஆப்பிள் விவசாயமே அதல பாதாளத்துக்கு சென்றுவிடும். இதனால் ஆப்பிள் போல தங்களின் கண்களும் சிவந்துவிட்டதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் இதுவரை அமெரிக்க வேளாண்பொருட்களுக்கு இந்தியாவில் 30 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்ட நிலை மாறி, இப்போது பூஜ்ஜிய வரியாகிவிட்டது. அமெரிக்க விவசாய பொருட்களின் விலை மிக குறைவாக சந்தைக்கு வரும் நிலையில், எங்கள் பொருட்களை அவர்களோடு போட்டியிடமுடியாமல் எங்குபோய் விற்பது? என்று விவசாயிகள் கேட்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை கொஞ்சமும் பாதித்துவிடக்கூடாது என்பதை முக்கிய அடிப்படையாக கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com