குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து.. தேர்வர்களுக்கு மனச்சோர்வு

நவீனதொழில்நுட்பம் வருவதற்கு முன்புகூட இதுபோல எந்த குளறுபடியும் நடந்தது இல்லை.
குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து.. தேர்வர்களுக்கு மனச்சோர்வு
Published on

படித்து பட்டம் பெறுபவர்கள் எல்லோருமே அரசு வேலைக்குப் போகவேண்டும் என்பதை முதல் குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அதையே தங்கள் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு பல ஆண்டுகளாக அதற்கான திட்டமிடலையும், தேர்வுக்கான ஆயத்தப்பணிகளையும் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அந்தவகையில், அரசுத்துறைகளில் குரூப்-1, 2, 2ஏ, 3, 3ஏ, 4, ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று கூறப்படும் டி.என்.பி.எஸ்.சி. ஒவ்வொரு ஆண்டும் காலஅட்டவணையை வெளியிட்டு நடத்துகிறது. அதன்படி, கடந்த 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட குரூப்-2, 2ஏ பதவிகளில் அடங்கிய 828 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலைத்தேர்வு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடந்தது.

இந்தத் தேர்வை 4,20,217 பேர் எழுதினார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 47 மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. அரசுப்பணியை வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு பல ஆண்டுகளை செலவழித்த 9,244 பேர் இந்தத் தேர்வை எழுத ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் தேர்வு மையத்துக்கு வந்தனர். அப்படி சென்னையில் அமைக்கப்பட்டிருந்த மையங்களுக்கு சென்றவர்களில் பெரும்பாலானோருக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்த தேர்வு மையங்களில் அவர்களின் பதிவெண் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு, பகல் பாராமல் கண்விழித்து தேர்வுக்கு தயாரானவர்களுக்கு இப்படி ஒரு இடியை இறக்கியதால், அவர்கள் நிலைகுலைந்துபோயினர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போனவர்கள் ஒருகட்டத்தில் வீதிக்கு வந்து போராட்டத்திலும் குதித்தனர்.

இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் களத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பகோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் தேர்வு நடத்தஇயலவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த குரூப்-2ஏ பாடங்களுக்கான தேர்வும், குரூப்-2, 2ஏ தமிழ் தகுதித்தாள் தேர்வும் தமிழ்நாடு முழுவதும் ரத்துசெய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. பல ஊர்களில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தவர்களை பாதியிலேயே வெளியேறச்சொல்லியும் இருக்கிறார்கள். இந்த சம்பவம் முகமலர்ச்சியோடு தேர்வை எதிர்கொள்ள வந்தவர்களுக்கு மிகுந்த மனச்சோர்வை கொடுத்திருக்கிறது. தேர்வு எழுத வந்திருந்தவர்களில் சிலர் 4 ஆண்டுகளாக இந்தத் தேர்வுக்காக கடும் முயற்சியெடுத்தோம் என்றும், 2-வது, 3-வது, 4-வது முறை இந்த தேர்வை எழுதவந்தோம், எங்களை திரும்பிப்போக சொல்லிவிட்டார்கள் என்றும் வேதனையை கொட்டித்தீர்த்தனர். இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'

நவீனதொழில்நுட்பம் வருவதற்கு முன்புகூட இதுபோல எந்த குளறுபடியும் நடந்தது இல்லை. இந்தச் சம்பவம் லட்சக்கணக்கான தேர்வர்களின் நம்பிக்கை தீபமாக இருந்துவரும் டி.என்.பி.எஸ்.சி.யின் மீதே ஒரு நம்பிக்கை குறைவை ஏற்படுத்திவிட்டது. சில தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வெளியில் நின்றுகொண்டு தேர்வுமைய ஒதுக்கீட்டிலே தொழில்நுட்பக்கோளாறு என்றால், நமது மதிப்பெண்களிலும், தரவரிசைப்பட்டியலிலும் இதுபோன்ற தொழில்நுட்பக்கோளாறு ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? என்று ஆதங்கமாக பேசிக்கொண்டிருந்தனர். நடந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்பதற்கு வெளிப்படைத்தன்மையான முழு விசாரணையை டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக நடத்தி, அதன் முடிவுகளை மனச்சோர்வால் வாடிப்போன அனைத்து தேர்வர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்பதை உறுதியளிக்கும் வகையில், அதற்கான முன்னேற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com