வேலைவாய்ப்புக்கு துணையாக ஆங்கிலத்தில் பேச்சாற்றல்

ஆங்கிலத்தில் பேசும் புலமை வேலைவாய்ப்புகளை தேடும்போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
 வேலைவாய்ப்புக்கு துணையாக ஆங்கிலத்தில் பேச்சாற்றல்
Published on

கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரி டாக்டர் எம்.சி.சுதாகர் மற்ற அரசியல்வாதிகள் சொல்ல துணியாத கருத்தை மிக துணிச்சலாக கூறியிருக்கிறார். பொதுவாக தாய்மொழியை பற்றி பேசாமல் ஆங்கிலத்தையோ, வேறு மொழியை படிப்பதையோ, பேசுவதையோ ஏன் அதைப்பற்றி குறிப்பிட்டோ பேசினால் எங்கே நம்மை தாய்மொழிக்கு எதிரானவன் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எம்.சி.சுதாகர் சற்று வித்தியாசமாக தன் மனதில் உள்ள கருத்துகளை பளிச்சென பதிவுசெய்துள்ளார். இளைஞர்களுக்கு ஆங்கில திறனை வளர்ப்பதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடு அவருடைய துறை மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அவர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது எம்.சி.சுதாகர், "ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்தபோதிலும் கல்லூரி அல்லது பல்கலைக்கழக வளாகங்களில் பலர் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால் முதலில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தை கற்பது மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும். என்னுடைய அனுபவத்தை எடுத்துக்கொண்டால் நான் ஒரு பல் மருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தேன். அப்போது நாங்கள் வளாகத்துக்குள் ஆங்கிலத்தில்தான் அதிகமாக பேசுவோம். அந்த நேரத்தில் எங்களுடைய தன்னம்பிக்கை அளவு மிக அதிகமாக இருந்தது. ஆனால் பொதுவாழ்க்கைக்கு வந்தப்பிறகு நான் கன்னடத்திலும், மற்ற பிராந்திய மொழிகளிலும் மட்டுமே பேச தொடங்கினேன். இதனால் எனக்கு பொதுவெளியில் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு கஷ்டப்படும் நிலை உருவாகிவிட்டது. ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் வெகுவாக குறைந்துவிட்டது.

ஆங்கிலத்தில் பேசும் புலமை வேலைவாய்ப்புகளை தேடும்போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தரவரிசை பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும் சரளமாக ஆங்கிலத்தில் பேசமுடியவில்லையென்றால், அது அவர்களுடைய வேலைவாய்ப்பை பாதித்துவிடும். கர்நாடகத்தில் இப்போது ஆங்கில திறனை வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது" என்று திறந்த புத்தகம் போல வெளிப்படையாக பேசியது பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திறனை வளர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில் பேச பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், சரளமாக பேசுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.

கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கேம்பிரிட்ஜ் போன்ற உலக தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஆங்கில மொழி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் நமது மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் வேலைவாய்ப்பு சந்தைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை. பட்டப்படிப்பு படிக்கவில்லையென்றாலும் நுனி நாக்கில் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் இருந்தால் பி.பி.ஓ. கால் செண்டர்களில் உடனடியாக வேலை கிடைத்துவிடும். ஒரு புகழ்பெற்ற பி.பி.ஓ. கால் செண்டர் நிறுவனத்தில் பொதுமேலாளராக இருக்கும் ஒருவர், பட்டப்படிப்பு படிக்கவில்லை என்றாலும் வெளிநாட்டினர் போன்று நெளிவு, சுளிவுடன் ஆங்கிலத்தை உச்சரிக்கும் அளவுக்கு தன்னுடைய மொழி புலமையை வளர்த்துக்கொண்டார். இதனால் அந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு இப்போது நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறார். ஆங்கிலத்தில் புலமையை வளர்ப்பவர்கள் தாய்மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. தாய்மொழியிலும் திறமை வேண்டும். அதேநேரத்தில் ஆங்கிலத்திலும் தங்கள் ஆற்றலை வளர்த்துக்கொண்டால் உள்நாட்டு நிறுவனங்களில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிறுவனங்களிலும் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெறமுடியும். எனவே ஆங்கில புலமையை வளர்ப்பது அனைவருக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com