இந்தியாவுடன் நல்லுறவு மலருமா?

'ஜமாத்-இ-இஸ்லாமி'யின் கூட்டணி கட்சியான மாணவர்கள் ஆதரவு தேசிய மக்கள் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்று, மக்களிடம் தன் செல்வாக்கை இழந்துள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவு மலருமா?
Published on

நமது அண்டை நாடான வங்காளதேசம் உருவானதே இந்திய ராணுவத்தின் உதவியால்தான். வங்காளதேச மக்களின் விடுதலை போராட்டத்துக்கு இந்தியாவும் கரம் கோர்த்ததால் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் 1971-ம் ஆண்டு பிரிந்து சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறது. இதற்கு அப்போது நமது ராணுவ தளபதியாக இருந்த சாம் மானேக்ஷா, படைவீரர்களை சிறப்பாக வழிநடத்தியதே முக்கிய காரணம். இந்தியாவின் தயவால் மலர்ந்த வங்காளதேசம், வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோல கடந்த சில ஆண்டுகளாக நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது.

அதுவும் இப்போது நடந்துவரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று அடம்பிடித்து போட்டியிலேயே கலந்துகொள்ளவில்லை. இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் முகமது யூனுஸ் தலைமையில் இயங்கிவந்த இடைக்கால அரசாங்கம்தான். இதற்கு முன்பு ஷேக் ஹசீனா 15 ஆண்டுகளாக வங்காளதேச பிரதமராக இருந்த காலத்தில் கடந்த 2024-ம் ஆண்டு அந்த ஆட்சிக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வெடித்தது. மிகவும் உக்கிரமாக நடந்த இந்த போராட்டத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர். ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தால்போராட்டத்தை அடக்கமுடியாத நிலையில் அவர் நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத்தொடர்ந்து ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றது.

இந்த இடைக்கால அரசாங்கம் இந்தியாவுக்கு விரோதமான நிலைப்பாட்டையே எடுத்து வந்தது. இந்தசூழலில், அந்த நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சி தலைவருமான மறைந்த கலீதா ஜியா, பல ஆண்டுகளுக்கு முன்பு ராணுவப்புரட்சியை கொண்டுவந்து அதிபராகி கொல்லப்பட்ட ஜியாவுர் ரகுமான் ஆகியோரது மகனும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி 17 ஆண்டுகள் லண்டனில் தஞ்சமடைந்த பிறகு நாடு திரும்பிய தாரிக் ரகுமான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி களத்தில் இறங்கியது. அந்த கட்சியை எதிர்த்து பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமான 'ஜமாத்-இ-இஸ்லாமி' கட்சியும், இதர கட்சிகளும் போட்டியிட்டன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

300 தொகுதிகளை கொண்ட வங்காளதேசத்தில் 299 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் தாரிக் ரகுமான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி 212 இடங்களிலும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'ஜமாத்-இ-இஸ்லாமி'யின் கூட்டணி கட்சியான மாணவர்கள் ஆதரவு தேசிய மக்கள் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்று, மக்களிடம் தன் செல்வாக்கை இழந்துள்ளது. ஆக கலீதா ஜியா, ஷேக் ஹசீனா ஆகிய 2 பெண் பிரதமர்களின் 35 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஆண் பிரதமர் ஆட்சி கட்டிலில் அமரப்போகும் காலம் கனிந்திருக்கிறது. எல்லையை மட்டுமல்லாமல் டீஸ்டா நதிநீர் உள்பட பல விஷயங்களில் இந்தியாவும், வங்காளதேசமும் பின்னி பிணைந்து இருக்கின்றன. வங்காளதேச மக்களிடையே மீண்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தவேண்டும், இந்தியாவுடன் நெருக்கமான நல்லுறவை உறுதி செய்யவேண்டும் என்ற 2 சவால்கள் புதிய பிரதமருக்கு முன்னால் இருக்கின்றன. இந்த சவால்களை சமாளித்தால்தான் அந்த நாடு பொருளாதார வளர்ச்சியை காண முடியும்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com