

வந்தே மாதரம் என்ற மந்திர மொழி சுதந்திர போராட்ட வீரர்களின் நாடி நரம்புகளில் ஊடுருவி, நாட்டுப்பற்று உணர்வை பெருக்கெடுக்க வைத்தது. போராட்ட களத்தில் வீரர்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டியதும் இந்த பொன்வரிகள் தான். அதனால்தான் நாம் இப்போது சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். கொடிகாத்த குமரன் தன் உயிர்ப்போகும் தருவாயிலும் உதிர்த்த சொல் வந்தே மாதரம் தான். மகாகவி பாரதியாரும் தேசிய கீதம் என்ற தலைப்பில் எழுதிய பாடல்களில் 'வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்' என்றுதான் தொடங்கினார். வந்தே மாதரம் பாடலை வங்கத்து கவிஞர் பங்கிம் சாட்டர்ஜி எழுதி 150 ஆண்டுகளாவதையொட்டி நாடுதழுவிய கொண்டாட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 7-ந்தேதி தொடங்கியது.
தேசப்பற்று விதையை தூவிய வீரமிக்க பாடல் இப்போது மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால் சர்ச்சைக்குள்ளாகிவிட்டது. இதுவரை ஜனாதிபதியோ, கவர்னரோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில், 'ஜன கண மன அதி' என்று தொடங்கும் தேசிய கீதம் இசைக்கப்படும் அல்லது பாடப்படும். அதுபோல அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த பாடல் முழுவதுமாக இசைக்க 52 வினாடிகள் எடுத்துக்கொள்ளும். பொதுவாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்பதுதான், அதற்கு கொடுக்கும் மரியாதையாகும். சினிமா தியேட்டரில் கூட படம் முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்ற உத்தரவு இருந்தது. இப்போது அது நடைமுறையில் இல்லை.
மத்திய அரசு இப்போது பிறப்பித்துள்ள உத்தரவின்படி, ஜனாதிபதி, கவர்னர் கலந்துகொள்ளும் மத்திய-மாநில அரசு நிகழ்ச்சிகளில் அனைத்திலும் முதலில் வந்தே மாதரம் பாடலும், அடுத்து தேசிய கீதமும் இசைக்கப்படவேண்டும். வந்தே மாதரம் முழு பாடலுக்கு 6 சரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் காங்கிரஸ் கூட்டங்களில்தான் இந்த வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது 6 சரணங்களில் கடைசியாக உள்ள 4 சரணங்கள் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாக கருதி காங்கிரஸ் கட்சியால் 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பின்னர் 2 சரணங்கள் மட்டுமே இதுவரை நாடு முழுவதும் பாடப்பட்டு வந்தன. இப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இனி நீக்கப்பட்ட 4 சரணங்களையும் சேர்த்து 6 சரணங்களையும் உள்ளடக்கி பாடவேண்டும். இதற்கு 3 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆகும்.
வந்தே மாதரம் பாடலுக்கு அடுத்து உடனடியாக தேசிய கீதம் பாடப்படவேண்டும். அதற்கு ஆகும் 52 வினாடியையும் சேர்த்தால் 4 நிமிடங்கள் 2 வினாடி ஆகும். இந்த நேரம் முழுவதும் எழுந்து நிற்கும் பொதுமக்கள், நிகழ்ச்சி முடியும்போதும் அதே மணித்துளிகள் எழுந்து நிற்கவேண்டும். இதுபோல அனைத்து பள்ளிக்கூடங்களிலும் காலையில் வந்தே மாதரம் பாடல் அனைத்து மாணவர்களாலும் ஒருமித்த குரலில் சேர்ந்து பாடப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல தேசிய கொடியை ஏந்திக்கொண்டு வரும் அனைத்து அணிவகுப்பு நிகழ்ச்சிகளிலும் இந்த 2 பாடல்களும் இசைக்கப்படவேண்டும். தமிழக சட்டசபையை பொறுத்தமட்டில் கவர்னர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், அவருடைய உரை முடிந்த பிறகு தேசிய கீதமும் இசைக்கப்படுவது மரபாக உள்ளது. இனி வந்தே மாதரம் பாடலும், உடனடியாக தேசிய கீதமும் இசைக்கப்படவேண்டும் என்றால் தமிழகம் அதை ஏற்றுக்கொள்ளுமா? என்பது புதிராக இருக்கிறது.