மகிழ்ச்சி பெருக்கில் மகளிர்

நேற்று காலை "குட் மார்னிங்" என்பது உண்மையிலேயே "சூப்பர் மார்னிங்" ஆக அமைந்தது.
மகிழ்ச்சி பெருக்கில் மகளிர்
Published on

தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு நேற்று காலை "குட் மார்னிங்" என்பது உண்மையிலேயே "சூப்பர் மார்னிங்" ஆக அமைந்தது. அவர்களது செல்போன்களில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், “உங்கள் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியை கண்ட பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அதே நேரத்தில், “இந்தத் தொகையை நமது கணக்கில் யார் செலுத்தியுள்ளனர்?" என்ற கேள்வியும் எழுந்தது. வங்கிகள் கூட திறக்கப்படாத அந்த நேரத்தில், இவ்வளவு பெரிய தொகையை யார் செலுத்தியிருக்கலாம் என்ற ஆச்சரியமும் அவர்களுக்குள் நிலவியது. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் அவர் வெளியிட்ட அறிவிப்பு, மகளிருக்கு இரட்டிப்பு உற்சாகத்தை அளித்தது. கடும் நிதி நெருக்கடியை சமாளித்து, மத்திய அரசின் ஒதுக்கீட்டுக் குறைப்புகளையும் மீறி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு பயனளித்த இந்தத் திட்டம், விரிவுபடுத்தப்பட்டு தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகின்றனர். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை காரணம் காட்டி, அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை நிறுத்துவதற்காக சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர முயற்சி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read
தீர விசாரிக்காமல் கைது செய்வதா?
மகிழ்ச்சி பெருக்கில் மகளிர்

எனவே, ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத்தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு சிறப்பு உதவியாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ஆக மொத்தம் ரூ.5 ஆயிரம் நிதி, ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் காலையிலேயே வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு தேர்தல் வாக்குறுதியையும் அளித்தார். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், தற்போது வழங்கப்படும் ரூ.1,000 உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக ஆக உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.

ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை, மகளிர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதால், இது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ' ஏற்படுத்தும் என்று சிலர் கூறலாம். ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.5 ஆயிரம் தொகையில் ரூ.3 ஆயிரம் என்பது அரசு மாதம்தோறும் செலவழித்து வரும், ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகைதான். மீதமுள்ள ரூ.2 ஆயிரம் மட்டுமே கூடுதல் செலவாகும். இதற்காக தமிழக அரசுக்கு கூடுதல் செலவு ரூ.2,620 கோடி ஆகும். இது மிகப்பெரிய தொகை அல்ல. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அரசின் வருவாய் நிலையை கருத்தில் கொண்டால், இது தாங்கக்கூடிய செலவு தான். மேலும், அரசின் மொத்த பட்ஜெட்டில் இது ஒரு சதவீதம் கூட இல்லை. வெறும் 0.75 சதவீதம் மட்டுமே ஆகும். இது தேர்தல் நோக்கிலான அறிவிப்பு என்ற விமர்சனங்கள் இருந்தாலும், மகளிரின் மனங்களை குளிர்விக்கும் அறிவிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com