ஜனநாயக தோட்டத்தில் பூங்காற்று வீசட்டும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்களைக்கொண்ட அவையில் பிரதமர் பேசாதது வரலாற்றில் அழிக்கமுடியாத வடுவாக மாறிவிட்டது. இனியாவது மக்களவையில் தென்றல் தவழட்டும்.
ஜனநாயக தோட்டத்தில் பூங்காற்று வீசட்டும்
Published on

நாடாளுமன்றம் என்பது பூத்து குலுங்கும் நறுமண மலர்கள், பழங்களை தரும் ஜனநாயக தோட்டமாக வர்ணிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மரபுகளும், மாண்புகளும் எப்போதும் காப்பாற்றப்படவேண்டும். அரசியல் சட்டத்தில் காட்டப்பட்டுள்ள வழிமுறைகள் மீறப்படக்கூடாது. அது காலம் காலமாக பின்பற்றப்படவேண்டிய ஒன்றாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் சட்டமும், நாடாளுமன்ற விதிமுறைகளும்தான் புனித நூல்களாகும். அந்தவகையில், அந்த 2 நூல்களிலும் இருக்கும் பிரிவுகள் அனைத்து உறுப்பினர்களால் மட்டுமல்ல, அவையாலும் சற்றும் பிசகாமல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையோடு தொடங்கவேண்டும் என்பது மரபாகும். அவைக்கு ஜனாதிபதியை அழைத்து வருவதற்கும் சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன.

ஜனாதிபதி உரையாற்றியவுடன் அடுத்து அவை கூடும் நாளில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும். பின்பு இந்த தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும். ஆளுங்கட்சி. எதிர்க்கட்சிகள் தரப்பில் உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் விவாதங்களை முன்னெடுப்பார்கள். இறுதியில் அந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் பேசுவார். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இதுதான் நடைமுறை, மரபு. ஆனால் இந்தமுறை மக்களவையில் இந்த கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும்.எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஆனந்த பூங்காற்று வீசுவதற்கு பதிலாக, புயல் சுழன்று அடித்தது. இதனால் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மட்டுமல்ல, பதில் உரைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்கவேண்டும் என்ற மரபை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் எதிர்க்கட்சியினர் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தும், ராகுல்காந்தியை பேசவிடவில்லை என்ற காரணத்துக்காகவும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்ததால், பிரதமரின் பதில் உரையில்லாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா குரல் ஓட்டு மூலம் அறிவித்தார்.

ஆக பிரதமர் பதில் அளிக்கவேண்டும் என்ற மரபு கடைபிடிக்கப்படவில்லை. இது மக்களவையில் முதல் முறையல்ல. 2004-ல் இதேபோன்று அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு, பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளிக்க முயன்றபோது பா.ஜனதா உறுப்பினர்கள் ஊழல் செய்த மந்திரிகளை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோஷமிட்டுக்கொண்டு இருந்ததால் அவரால் பேசமுடியாமல் இப்போது போன்று சபாநாயகர் குரல் ஓட்டு மூலம் தீர்மானத்தை நிறைவேற்றினார். இப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் பேசும்போது, அவரது இருக்கைக்கு மிக அருகில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தனக்கு தகவல் வந்தது என்றும், அந்த சமயத்தில் இத்தகைய செயல்கள் சில அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு அளித்துவிடும் என்பதாலும், அப்படி ஏதாவது நடக்கும்பட்சத்தில் ஜனநாயக பாரம்பரியங்கள் சுக்குநூறாக கிழித்தெறியப்பட்டுவிடும் என்பதாலும்தான் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று ஆலோசனை கூறியதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வராவிட்டாலும், மாநிலங்களவைக்கு சென்று இதே தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து 100 நிமிடங்கள் பேசி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டார். ஆனாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்களைக்கொண்ட அவையில் பிரதமர் பேசாதது வரலாற்றில் அழிக்கமுடியாத வடுவாக மாறிவிட்டது. இனியாவது மக்களவையில் தென்றல் தவழட்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com