

திருப்பூர்,
பனியன் தொழில் நகரான திருப்பூரில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகம். குறிப்பாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கு இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதன்காரணமாக மாநகரில் வாகன நெரிசல் என்பது அதிகம். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைக்கு செல்வது, ஆடைகளை அருகில் உள்ள நிறுவனங்ளுக்கு எடுத்துச்செல்வது என்று நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தொழிலாளர்கள் புலம்பல்
அவர்கள் எண்ணம் முழுவதும் உரிய நேரத்தில் வேலையை முடித்துக்கொடுப்பதிலேயே சென்று வருகிறது. சாலைகளில் கூட வேகமாக செல்லும் மனப்பாங்கு கொண்டவர்களாகவே உள்ளனர்.
உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருப்பூரில், தொழிலாளர்களின் இந்த அவசரமின்மையை பயன்படுத்தி முறைகேடு சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப சென்றால் லிட்டர் அளவில் குறைபாடு இருப்பதாக தொழிலாளர்கள் புலம்பி வருகிறார்கள். குறிப்பாக ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இரவு நேரத்தில் 1 லிட்டர் பெட்ரோல் நிரப்பி விட்டு வாகன ஓட்டி சிறிது தூரம் சென்றதும் மோட்டார் சைக்கிள் நின்று விட்டது.
புகார் எண்கள்
1 லிட்டர் பெட்ரோல் நிரப்பி விட்டு சிறிது தூரம் செல்வதற்குள் எவ்வாறு தீரும் என்று புரியாமல் தவித்தவர், அந்த விற்பனை நிலையத்துக்கு சென்று கேட்டால் பெட்ரோல் 1 லிட்டர் அளவுக்கு நிரப்பி விட்டதாக ஊழியர் தெரிவித்துவிட்டார். இரவு நேரங்களில் ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இதுபோன்று பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு சம்பவங்கள் நடப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அதாவது பெட்ரோல் நிரப்பும் ஊழியர்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பெட்ரோல் அளவை குறைத்து நிரப்புவதாக தொடர்ச்சியாக புகார் எழுந்துள்ளது.
பெட்ரோல் அளவு குறைபாடு உள்ளிட்ட புகார்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் புகார் எண்கள் அறிவிப்பு பலகையாக வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இதுபோன்ற அறிவிப்பு பலகைகள் இல்லை.
அதிகாரிகள் ஆய்வு அவசியம்
எனவே உயர் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஒருசில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோல் அளவு புகார் தெரிவிக்கும் புகார் எண்களையும் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு வைப்பது அவசியமாகும். கலெக்டர் இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.