ஐ.எஸ்.பி.எல் - சாம்பியன் வென்ற நடிகர் சூர்யாவின் “சென்னை சிங்கம்ஸ்”

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், கொல்கத்தா டைகர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சிங்கம்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐ.எஸ்.பி.எல் -  சாம்பியன் வென்ற  நடிகர் சூர்யாவின் “சென்னை சிங்கம்ஸ்”
Published on

டி20 கிரிக்கெட்போல டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்படுகிறது. ஐ.எஸ்.பி.எல் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. ஐ.எஸ்.பி.எல் தொடரில் விளையாட இருக்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியிருந்தார்.

குஜராத் மாநிலம், சூரத் லால்பாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணியின் கேப்டன் அங்கூர் சிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் கேதன் மத்ரே 30 ரன்களும், சர்பராஸ் கான் 20 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் சென்னை அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது.

104 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா டைகர்ஸ் அணியின் பேட்டிங் வரிசை, சென்னை அணியின் இறுக்கமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து சரிந்தது. அந்த அணியின் அரிஷ் கான் 25 ரன்கள் எடுத்துப் போராடிய போதிலும், 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சிங்கம்ஸ் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணிக்கு ரூ. 2 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூ. 1 கோடியும் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சிங்கம்ஸ் அணி தனது முதல் ஐஎஸ்பிஎல் மகுடத்தைச் சூடியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களை அந்த அணியின் உரிமையாளர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com